ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து, ஒன் பை ஒன்னாக வட்டியை உயர்த்தும் வங்கிகள்

மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகரித்ததைத் தொடர்ந்து, வங்கிகளும் வட்டி உயர்வை அறிவிக்கத் துவங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை 0.35 சதவிகிதம் உயர்த்தி, கடந்த 7ந் தேதியன்று அறிவித்ததை அடுத்து, வங்கிகள் தங்கள் பங்குக்கு வட்டியை உயர்த்தி அறிவிக்கத் துவங்கி உள்ளன.

பேங்க் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்ததை அடுத்து, ரெப்போ அடிப்படையிலான கடனுக்கான வட்டியை, 9.10 சதவிகிதமாக உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி உயர்வு 7ந் தேதி முதலே அமலுக்கு வருவதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.

தனியார் துறை வங்கியான ஹெச்.எஃப்.டி.சி. பேங்க்கும், அதன் எம்.சி.எல்.ஆர். அடிப்படையிலான வட்டியை உயர்த்தி உள்ளதாக தெரிவித்து உள்ளது. இவ்வங்கி, ஓராண்டுக்கான அதன் பல்வேறு நுகர்வோர் கடனுக்கான வட்டியை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 8.60 சதவிகிதமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே எம்.சி.எல்.ஆர். கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த 1ந் தேதி முதல் உயர்த்தியுள்ள ஐசிஐசிஐ வங்கி, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித திருத்தத்தைத் தொடர்ந்து, ஒராண்டுக்கான குறியீட்டு எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதத்தை 7.90 சதவிகிதத்தில் இருந்து 8.40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது என்று வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மூன்று வங்கிகளையும் தொடர்ந்து, மேலும் பல வங்கிகள் வட்டி உயர்வை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.