விலையை உயர்த்தும் Ducati!

மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், வோல்ஸ்வோகன், கியா, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனால்ட், டோர்க் எலக்ட்ரிக்.. உள்ளிட்ட நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள தனது அனைத்து மோட்டார் சைக்கிள்களின் விலைகளை, இத்தாலியை மையமாக கொண்டு செயல்படும் சூப்பர்பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டியும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந் தேதி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்தப் புதிய விலை உயர்வு சென்னை, புது டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா.. என நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எவ்வளவு விலை உயர்கிறது என்பது குறித்த சரியான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

மற்ற உற்பத்தியாளர்களைப் போலவே, அதிகரித்துவரும் உற்பத்திச் செலவு மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டே விலை உயர்வினை அறிவித்திருப்பதாக தெரிவித்திருக்கும் டுகாட்டி மோட்டார் பைக் தயாரிப்பு நிறுவனம், தற்போது மூன்று புத்தம் புதிய மோட்டார் சைக்கிள் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.