SUCCESSFUL PERSONS OF NEW YEAR 2023

பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு என்று வருகின்றபோது அந்த ஆண்டிற்குரிய எண்ணை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

அந்த ஆண்டு எந்த கிரகத்திற்குரிய ஆண்டாக வருகிறது என்பதை வைத்து அதற்குரிய பலன்களை நாம் தெரிந்து கொள்வோம்.

2023 என்று வருகின்றபோது அதன் கூட்டுத்தொகை எண் 7ஆக வருகிறது. 7ஆம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும்.

கிரகங்களில் ஞான மோட்ச காரகன் என்று கூறப்படுபவர் கேது பகவான்.

வாழ்க்கையில் உள்ள சங்கடங்களை எல்லாம் நமக்கு வழங்கி, அதன்பிறகு தெளிவினை வழங்கிடக் கூடியவர் கேது பகவான்.

இந்த இடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு தகவலும் உள்ளது. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி மாதம் 1ந் தேதி என்று கூறப்படுகின்றபோது இரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்கும்.

அந்த நேரம் நமது பஞ்சாங்கத்தில் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் வருகிறது. அசுவினி நட்சத்திரத்திற்கு அதிபதியும் கேது பகவான்தான்.

இந்த நேரத்தில் மேஷ ராசியில் ராகு பகவானும் சஞ்சரித்து வருகிறார்.
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் யுத்த காரகன், ரத்த காரகன், வீரிய தைரிய காரகனாவார்.

செவ்வாய் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான அசுவினியில் புத்தாண்டு பிறப்பதால் உலகில் சண்டை சச்சரவுகள், யுத்தம் என்று நடைபெறுவதற்கும், இனம் புரியாத வைத்தியத்திற்கு கட்டுப்படாத நோய்களால் மனிதர்கள் பாதிப்பிற்குள்ளாகவும் வாய்ப்புண்டு.

இந்த இடத்தில் வேறு ஒரு தகவலையும் சொல்லியாக வேண்டும். 4 ஆண்டுகளுக்கு முன்னால் ஐந்து கிரகங்களின் சேர்க்கை தொடங்கிய போதுதான் பேரழிவை உண்டாக்கிடக் கூடிய கொரோனா உலகத்தில் உருவானது.

குறிப்பாக குரு பகவானும், சனி பகவானும் இணைகின்ற நேரத்திலும், சனி பகவானின் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்ற நேரத்திலும், குரு பகவானின் சாரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்ற நேரத்திலும் சில சங்கடமான நிகழ்வுகள் நடைபெறும்.

இந்த குரு, சனி இணைவினை பிரம்மஹத்தி தோஷம் என்று கூறுவோம்.

புத்தாண்டு பிறக்கின்ற நேரத்தில் மீன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், மாசி மாதம் 12ந் தேதி வரை (24.02.2023) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.

உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி சனி பகவானாவார்.

சனி பகவான் சாரத்தில் குரு பகவான் சஞ்சரித்து வரும் வரை நமது நாடும், நாமும் ஒரு சோதனையை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

முதன்மையாக இந்த ஆண்டு கேது பகவானின் ஆதிக்கத்திற்குரிய ஆண்டு என்கின்றபோது சோதனைகளுக்கு பிறகுதான் வெளிச்சம் என்ற நிலை உண்டாகும். அது அரசியலாகட்டும், அரசாங்கம் ஆகட்டும், தனிமனித வாழ்க்கையாகட்டும் எதுவாக இருப்பினும் சில சோதனைகளை இந்த ஆண்டில் நாம் சந்தித்தே ஆக வேண்டும்.

கால புருஷ தத்துவத்தின் முதல் வீடான மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கும் 2023, அங்கு சஞ்சரித்து வரும் ராகுவின் காரணமாக, அந்நிய நாடுகளால், அந்நிய மனிதர்களால் யுத்தம், போராட்டம், அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள், அரசியல் கட்சிகளுக்குள் குழப்பம், மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்களால் மனிதர்களுக்கு சங்கடம் என்பதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

இந்த ஆண்டில் ராகு திசை மற்றும் கேது, செவ்வாய் திசை நடப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
– ஜோதிட வித்தகர் திருக்கோவிலூர் பரணிதரன், தொடர்புக்கு : 9444 393 717.