திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (23.12.2022) பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகள் பாடத்திட்டத்தில் உள்ள பாடலை பாடினர். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தவர், பள்ளி குழந்தைகளுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மேலும், பள்ளி வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு, சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார். அங்கு வீராங்கனைகள் விடுதியில், மாணவிகள் தங்கும் அறைகள், சமையலறை, உணவு வகைகளை பார்வையிட்டு, மாணவிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், உணவு வகைகளின் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வீராங்கனைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.