புதுடெல்லி: “உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுகிறேன்.. முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல்.. என கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. நாம் எச்சரிக்கையாக, பாதுகாப்பாக இருந்தால், மகிழ்ச்சியுடன் வாழலாம்” என்று நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்ததைத் தொடர்ந்து, கொரோனா நோய் தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்று இந்திய மருத்துவ சங்கத்துடன் காணொலி வாயிலாக முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
இக்காணொலிக் கூட்டத்தில், நாட்டில் தற்போதைய கொரோனா நோய் தொற்று நிலவரம் மற்றும் கொரோனா நோய் பரவலை எதிர்கொள்ள எந்தெந்த வகைகளில் எல்லாம் நாடு ஆயத்தமாக இருக்கிறது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இதுவரை 4.46 கோடி பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 30 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் கேரளாவில் இருவர் கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் புதிதாக இருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி மொத்தம் 3,428 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 196 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
அதேபோல், சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய ஆக்ராவைச் சேர்ந்த 40 வயது நபருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்களும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆக்ராவில் பொதுமக்களுக்கு புதிய வகை கொரோனா நோய் பரவல் குறித்து சந்தேகங்கள் இருந்தால் 0562 – 2600412, 94585 69043 என்ற சுகாதாரத் துறையின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா நோய் தொற்று மிகவேகமாகப் பரவிவரும் சூழ்நிலையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா நோய் தொற்றின் ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய மருத்துவக் கூட்டமைப்புடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.