புதுச்சேரி : யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, நாளை ஒரு நாள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது புதுச்சேரி அதிமுக.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு அதிகாரத்துடன் செயல்படுவதோடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவும், தனித் தேர்வாணையம் அமைத்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு முழுமையாக வழங்கிடவும், மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி மாநிலம் இணைக்கப்பட்டு அதிக நிதி வருவாய் கிடைத்திடவும், அறிவிக்கப்படும் திட்டங்கள் உடனுக்குடன் செயல் வடிவம் பெற்றிடவும், மக்களின் தேவை அறிந்து தன்னிச்சையாக மாநில அரசு செயல்படவும் மற்றும் நிதி நிலைமையில் தன்னிறைவு பெற்றிட, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும் நாளை காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டத்தை நடத்துகிறது புதுச்சேரி அதிமுக.
அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி, புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.அன்பழகன் தலைமையில் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில், புதுச்சேரி மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் கோ.தமிழ் என்கிற தமிழ்வேந்தனுடன் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொள்ளவிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்தார்.