இன்று தொடங்கியது ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு

சென்னை : ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கி, ஜனவரி மாதம் 4ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த 5 அரசுக் கல்லூரிகளில் சித்தா (பி.எஸ்.,எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.,எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய ஆயுஷ் பட்டப்படிப்புகளில் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2,573 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 878 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 707 விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின்கீழ் அரசுக் கல்லூரிகளில் 21 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 68 இடங்கள் என மொத்தம் 89 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 424 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஜனவரி மாதம் 4ந் தேதி வரை நடக்க உள்ளது.

டிசம்பர் 31, ஜனவர் 1 மற்றும் 2ந் தேதிகளில் கலந்தாய்வு இல்லை. இதுகுறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம்.