பெங்களூரு : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்கு 5ஜி தொழில்நுட்ப சேவைகளை சிறந்த முறையில் வழங்குவதற்காக, இந்தியாவின் முன்னணி ஸ்மாா்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஷாவ்மியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரிலையன்ஸ் ஜியோவின் ‘ட்ரூ 5ஜி’ சேவைகளை, ஷாவ்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாடிக்கையாளா்கள் சிறந்த முறையில் பெறுவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாவ்மி நிறுவனத்தின் எம்ஐ அல்ட்ரா 5ஜி, ஷாவ்மி 12 ப்ரோ 5ஜி உள்ளிட்ட அனைத்து 5ஜி ஸ்மார்ட் போன்களிலும் ரிலைன்ஸ் ஜியோவின் ‘ட்ரூ 5ஜி’ சேவை தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அந்த சாதனங்களின் அடிப்படை மின்பொருள் திறனேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.