பொங்கல் தொகுப்புடன் கரும்பு - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பினையும் சேர்த்து வழங்கிட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றது குறித்து, இன்று (28-12-2022) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், முழுக் கரும்பு ஒன்றினையும் சேர்த்து, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினை 2.1.2023க்கு பதிலாக 9.1.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கும் பணி 3.1.2023 முதல் 8.1.2023 வரை நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.ஆர். பெரியகருப்பன், அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.