சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் : கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம் : நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா, சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து உற்சவ ஆச்சாரியார் சு.ரா.நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் ரிஷபக் நேற்று காலை கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று (29.12.2022) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலாவும், நாளை (30.12.2022) தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலாவும், 31ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலாவும், ஜனவரி மாதம் 1ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 2ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 3ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், 4ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்கு திரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

5ந் தேதி தேர்த் திருவிழாவும், அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 6ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும் அதன் பின்பு சொர்ண அபிஷேகமும் நடைபெறும். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.