சமீபகாலமாக நான் பார்த்து வரும் சில பதிவுகள் நிறையவே கேள்விகளை எனக்குள் எழுப்பியது.
உதாரணத்திற்கு ஒரு சின்ன தகவல்.
ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. அந்த நேரத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்து, ஆண்டு முழுவதற்குமான பலன்களை, இந்த ஆண்டு உங்களுக்கு இப்படி இருக்கப் போகிறது! அப்படி இருக்கப் போகிறது என்றெல்லாம் ஏமாற்றுத்தனமான வேலைகளை ஒருசிலர் செய்து வருவதை நான் பார்த்தேன்.
எந்தவொரு கிரகமும் நிலையாக ஒரே வீட்டில் எப்போதும் சஞ்சரிப்பதில்லை. அவர்களுடைய காலத்திற்கு ஏற்ப ஒரு ராசிக்குள் இருக்கின்ற 30 டிகிரிக்குள் சஞ்சரித்துவிட்டு அதன் பிறகு அடுத்த ராசிக்குள் பிரவேசம் செய்து அங்கு சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் பலன் அளிப்பார்கள். இதன் காரணமாகத்தான் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடுகிறது. நிலையாக ஒருவரும் முன்னேற்றமான பலன்களைக் காண்பதில்லை. நிலையாக ஒருவரும் சோதனைகளையும் அடைவதில்லை.
இந்த நிலையில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டிற்கு நிலையாக ஒரு ராசியில் சஞ்சரித்திடக்கூடிய கிரகங்கள் என்றால் குரு, ராகு, கேது, சனி பகவான்கள் மட்டும்தான். இந்த நான்கு கிரகங்கள்கூட அவர்கள் சஞ்சரிக்கும் ராசியில் வக்கிரம் அடைவதும், பின்னோக்கிச் செல்வதும், வேறு சாரம் பெறுவதுமாக இருப்பார்கள். அப்போது அவர்கள் வழங்கும் பலன்களில் மாறுபாடு இருக்கும்.
இதன் காரணமாகத்தான் சனிப்பெயர்ச்சி பற்றி பேசுகிறோம், குருப்பெயர்ச்சி பற்றி பேசுகிறோம், ராகு – கேதுப் பெயர்ச்சிகளை மையமாக வைத்துப் பேசுகிறோம். காரணம் இந்த கிரகங்கள் மாற்றமில்லாதவை. குறைந்தபட்சம் ஓராண்டிற்கு ஒரு ராசியில் சஞ்சரிப்பார்கள்.
அந்த நிலையில், இந்த கிரகங்கள் அளிக்கின்ற பலன்கள் நிலையாக இருக்கும். அதேநேரத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சார பலன்களுக்கேற்ப இந்த கிரகங்கள் வழங்கிடும் பலன்களும் மாறுபடும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் சுய ஜாதகம் என்று ஒன்றிருக்கும். அந்த ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலைக்கேற்ப அவர்களுக்கு நடைபெறும் பலன்களிலும் மாற்றம் இருக்கும். தற்பொழுது நடந்துவரும் தசா புத்திக்கு ஏற்பவும் பலன்கள் மாறுபடக்கூடும்.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் வியாபார நோக்கத்திற்காக ஒரு ஆண்டு முழுவதும் இதுதான் பலன் நடக்கப்போகிறது, உங்களுடைய வாழ்க்கை இப்படியாகப் போகிறது, அப்படியாகப் போகிறது என்று ஒரு பொய்யான தகவலை மக்கள் மனதில் உண்டாக்கி வருகின்றனர்.
இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களின் வாக்கை நம்பி நாளையே தங்கள் தலையெழுத்து மாறிவிடும் என்று நம்புகிறவர்கள் நிலை என்னவாகும்?
கடைசியாக ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையையே அவர்கள் இழந்து விடுவார்கள். இது இந்த அரை வேக்காடுகளுக்கு சரியாக தெரிவதில்லை.
அதேபோல், பஞ்சாங்கங்களில் தமிழகத்தில் இரண்டுவிதமான பஞ்சாங்கம் நடைமுறையில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒன்று வாக்கிய பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம்.
இந்த இரண்டு பஞ்சாங்கங்களின் அடிப்படையில்தான் நாம் பலன்களை பார்த்து வருகிறோம். ஜோதிடர்களும் பலன்களைத் தெரிவித்து வருகிறார்கள். பல மாவட்டங்களில் பாரம்பரிய ரீதியிலான வாக்கிய பஞ்சாங்கத்தையும், சில மாவட்டங்களில் திருக்கணித பஞ்சாங்கத்தையும் நம்புகின்றவர்கள், பின்பற்றுபவர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே, அதில் குறிப்பிட்டுள்ளபடிதான் கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நேரத்தில் ஒளிமயமான எதிர்காலம் மூலம் பிரபலமான ஒரு பெரியவர், ஜோதிடத்தில் ஜாம்பவான் என்று சொல்லிக் கொள்பவர், திரும்பத் திரும்ப ஒரு தவறினை செய்து கொண்டிருக்கின்றார்.
ஜோதிடர்களுக்கெல்லாம் அடிப்படை ஆதாரம் என்பது பஞ்சாங்கம் மட்டும்தான். அந்த பஞ்சாங்கங்களில் திருக்கணித பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டால் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ந் தேதி சனிபகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கிய பஞ்சாங்கங்களான ஆற்காடு பஞ்சாங்கம், மனோன்மணி பஞ்சாங்கம், திருக்கோவில் பஞ்சாங்கம் என்று அனைத்து பஞ்சாங்கங்களிலும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ந் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டுமே பஞ்சாங்கங்களின் அடிப்படையில்தான். பஞ்சாங்கங்களில் புதியதாக ஒரு தகவலைச் சொல்லி, கிரக சஞ்சார நிலைகளில் மாற்றம் கண்டு அதன் அடிப்படையில் திருக்கணிதம் என்று ஒரு சாரார் பின்பற்றுகின்றனர். சூரிய உதயத்தை மையமாக வைத்து பரம்பரை பரம்பரையாக வாக்கிய பஞ்சாங்கத்தை பெரும் பகுதியினர் பின்பற்றி வருகின்றனர்.
ஆனால், இவை இரண்டையும் விட்டுவிட்டு இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சியே கிடையாது. டிசம்பர் மாதம்தான் சனிப்பெயர்ச்சி என்று ஒருவர் தொடர்ந்து பேசி வருவது எதைக் காட்டுகிறது என்றால், அவர் மீது மக்களுடைய பார்வை திரும்ப வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருப்பதாகவே தெரிகிறது.
எல்லோருக்கும் பொதுவாக ஒரு சின்ன தகவல்தான். ஜோதிடம் என்பது ஒரு கணக்குதான். வானியல் சாஸ்திரம்தான் ஜோதிடம். அதை மிகச்சரியாக சொல்லக் கூடியவர்கள் இருக்கின்றார்கள். ஒரு சிலவற்றை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு நிறைய பேசுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.
விளம்பரத்தின் வழியாக மக்களை தம்பக்கம் திசை திருப்புவதற்கும் ஒரு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான், கிரகங்களை வைத்து இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு இந்தப் பலன் நடக்கும். ஒரே வாரத்தில் நீங்கள் கோடீஸ்வரராக மாறிவிடுவீர்கள். ஒரே வாரத்தில் நீங்கள் குபேரராக மாறிவிடுவீர்கள் என்றெல்லாம் கதைகளை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதுபோன்ற கதைகள் நிச்சயமாக வெற்றி பெறாது. அதற்கு காரணம் ஒவ்வொருவருடைய ஜாதகமும் ஒவ்வொரு நிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலைக்கேற்ப, கிரக சஞ்சாரத்திற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும்.
இதுதான் உண்மை.
– ஜோதிட வித்தகர் திருக்கோவிலூர் பரணிதரன்,
தொடர்புக்கு : 9444393717.