30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நேற்றும் (30.12.2022), இன்றும் (31.12.2022) நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 30 வயதிற்கு மேற்பட்ட 500 தடகள வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

30 வயதிற்கு மேற்பட்டோருக்கான இத்தடகளப் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1000மீ, 1500மீ, 5000மீ மற்றும் 10,000மீ ஓட்டப்பந்தயம், 80மீ, 100மீ, 300மீ மற்றும் 400மீ மும்முனை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற தடகளப்போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி தன்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்ற மூத்த தடகள வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

அதேபோல், இன்று (31.12.2022) சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற, தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவிலும் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.