சென்னை : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“திமுக தேர்தல் வாக்குறுதி எண் 185ல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், 2025 – 2026ஆம் ஆண்டுக்கு முன்னர் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 187ல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தனர்.
இப்படி பல பொய்களை வாக்குறுதிகளாக வழங்கி இளைஞர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக வழக்கம்போல கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டனர்.
சென்ற ஆண்டு நடத்தப்படவேண்டிய TNPSC Group IV தேர்வுகள் தாமதமாகி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. வழக்கமாக தேர்வு நடத்தி ஓரிரு மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஆனால், தேர்வுகள் நடத்தி 6 மாதங்கள் ஆன பின்பும் இன்றைய தேதி வரை முடிவுகளை வெளியிடாமல் இருப்பது தேர்வு எழுதியவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
மேலும், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடத்தப்பட்ட TNPSC Group IV தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு இன்று வரை பணிநியமன ஆணைகளை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது திமுக அரசு.
எதற்காக இந்த தாமதம் என்பதை தேர்வு எழுதியவர்களுக்கு அரசு விளக்க வேண்டும். தேர்வு எழுதிய 15 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இதற்கு மேலும் காலம் கடத்தாமல், இனியும் அவர்களை ஏமாற்றாமல், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் TNPSC Group lV தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.