1000 அரங்குகள், 463 பதிப்பாளர்கள், 50 லட்சம் வாசகர்கள் என 2023 புத்தகத் திருவிழா ஆரம்பம்!

இந்த ஆண்டில் முதல் மாதத்தில் முதல் வாரத்தில் வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த சென்னை புத்தகக் காட்சி 06.01.2023 இன்று தொடங்குகிறது. 46வது புத்தகக் காட்சியைத் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி வைக்கிறார். முந்தைய ஆண்டில் 800 அரங்குகளைவிட, இந்த ஆண்டு 1000 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் பிரம்மாண்டத்துடன் தொடங்கும் இந்த புத்தகக் காட்சியில், இந்த வருடம் முதல் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி நடத்தப்படவிருக்கிறது.

புத்தகக் காட்சியின் வழிகாட்டுதல்கள்:

1. சென்னை புத்தகக் காட்சி தொடங்கும் நாள்: ஜனவரி 6 முதல் 22 வரை; நடைபெறும் இடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், சென்னை / நேரம்: வார நாட்களில் 3 மணி முதல் 9 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 8.30 மணி வரை, இந்த இடத்தில் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நடைபெறயிருக்கிறது.

2. ஒரே இடத்தில் அனைத்து புத்தகங்களையும் வாங்குவதற்கு ஏதுவாக, நுழைவுக் கட்டணமாக ரூ. 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும்.

3. ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்கும் வகையில் இலக்கியம், திரைப்படம், கலை தொடர்பான கருத்தரங்குகள், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், கலைத் துறை ஆளுமைகள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

4. பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பபாசி சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.

5. பெற்றோர்கள் தன் குழந்தைகளுடன் அங்குமிங்கும் திரியாமல் இருக்க வசதியாக, குழந்தைகளுக்கென பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வரும் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடி களிக்கவும் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

6. ஆயிரக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்து ஆண்டைவிட இந்த வருடம் 20 லட்சம் வாசகர்கள் கூடுதலாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறு பதிப்பகங்களுக்கு பிரத்யேகமாக அலமாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த அலமாரிகள் ஒரே அரங்கில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.

7. இந்த வருடம் திருநங்கைகளுக்கென பிரத்யேகமான அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

8. தொடக்க நாளான இன்று கலைஞர் பொற்கிழி விருதும், இன்னும் பல விருதுகள் வழங்கப்படவுள்ளன.

9. ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறவுள்ள சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் கூடுதலான சிறப்பம்சம் என்னவென்றார் வெளிநாட்டு புத்தகங்களுக்கான காப்புரிமை வாங்குவதும், நமது புத்தகங்களின் காப்புரிமை வழங்கும் பரஸ்பரப் பரிமாற்றமும் இதில் இடம்பெறும்.

10. இந்த வருடம் வரும் வாசகர்களுக்கு இளைப்பாறுவதற்கான இடம், கழிப்பறை, வாகன நிறுத்தம் என எல்லா ஏற்பாடுகளும் முந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு புதிய வசதிகளுடன் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் பபாசி தலைவர் வைரவன். ஏடிஎம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு சிக்னல் பிரச்னை இருந்த காரணத்தால் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் என மூன்று நெட்வொர்க்குகள் அமைக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பெருந்துணை வகுக்கும். வாருங்கள்… அறிவை அள்ளிச் செல்லுங்கள்.