பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வு குறும்படத்திற்கு இதுவரை 500 விருதுகளை வென்றுள்ளது!

பெண்களின் சடங்குமுறை குறித்த விழிப்புணர்வாக எடுக்கப்பட்ட ‘சிதை’ குறும்படத்திற்கு இதுவரை 500 விருதுகளை பெற்றுள்ளார் மானாமதுரையைச் சேர்ந்த இயக்குநர் கார்த்திராம்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் கார்த்திராம் (34). இவர் ‘துணிவு’ பட இயக்குநர் வினோத், கன்னட பட இயக்குநர் அய்யப்ப பி ஷர்மா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். தற்போது குறும்படம் ‘சிதை’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். திருமணமாகும் வரை பெண்கள் கன்னித்தன்மையோடு இருப்பதற்கு பழங்குடியினரிடையே நிலவும் சடங்குமுறைகள், பொதுவெளியில் கடைபிடிக்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம்தான் ‘சிதை’. இந்த குறும்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டு பெற்று பொதுநல அமைப்புகளிடமிருந்து இதுவரை 500 விருதுகளை வென்றுள்ளது.

இந்தக் குறும்படத்தை இயக்கிய கார்த்திராம் பேசியதாவது:

“பெண்கள் கன்னித்தன்மையோடு இருப்பதற்காக பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் ‘காஃப்டா’ எனும் சடங்கு முறை இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துவருகிறது. 4 வயது பெண் குழந்தை முதல் பூப்பெய்தும் சடங்கு வரை உலகம் முழுவதுமுள்ள பழங்குடியினரிடையே பின்பற்றி வருகிறார்கள். இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த சடங்குமுறையில் மருத்துவ ரீதியாகவும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக பெண்களின் பிறப்புறுப்பில் மேற்கொள்ளும் ஆபத்தான, அதேநேரத்தில் சடங்குகள் என்ற போர்வையில் மேற்கொள்ளும் முறை, கைவிடப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ‘சிதை’ என்ற தலைப்பில் குறும்படமாக எடுத்துள்ளேன். இந்த குறும்படம் இதுவரை 500க்கும் மேற்பட்ட விருதுகள் வென்றுள்ளது. பாகிஸ்தானில் நடந்த பிலிம்பேர் விழாவில் பங்கேற்று விருது பெற்றது. சென்னையில் நடந்த பிலிம்பேர் விருது நிகழ்ச்சியிலும் பங்கேற்று விருது பெற்றது. அதனைப் பார்த்த தயாரிப்பாளர் தன்ராஜ் திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். ‘சிதை’ குறும்படத்தை பார்த்த இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி உள்பட பலரும் பாராட்டினர்” என்றார்.