இனி ரோல்ஸ் ராய்ஸெல்லாம் வேஸ்ட்டு… பெண்ட்லிதான் பெஸ்ட்டு…

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான Bentley, தனது Bentayga EWB மாடல் காரை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதன் காரணமாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த உற்பத்தியாளர்களுக்குமே இந்தியா முக்கிய சந்தையாக உள்ளது. சிறிய பென்டிரைவ் முதற்கொண்டு பிரமாண்ட விமானங்கள் வரை, இந்திய சந்தையில் கிடைக்காத வெளிநாட்டு பொருட்களே இல்லை என்றே கூற வேண்டும். இதில் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் தான், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பெண்ட்லி, தனது புதிய மாடல் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Bentayga EWB (Extended Wheelbase) என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் இந்திய சந்தையில் காரின் விலை ரூ. 6 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட வீல்பேஸை கொண்ட இந்த கார் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு மே மாதத்தில் வெளியான நிலையில், அதன் உற்பத்தி அக்டோபர் மாதம் தொடங்கியது. ரோல்ஸ் ராயல்ஸ் கல்லினன் மாடல் காருக்கு போட்டியாக, இந்திய சந்தையில் இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Azure மற்றும் First Edition எனும் இரண்டு SUV பதிப்புகளில், இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய Bentley Bentayga EWB மாடலில் 4.0 லிட்டர் Twin Turbo V8 இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 542 HB பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு Automatic Transmission உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக இந்த காரை 290 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பொருத்தவரை புதிய Bentley Bentayga EWB மாடலில், ஏர்லைன் இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஆட்டோ கிளைமேட் சென்சிங் சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள பிஸ்னஸ் சீட் அம்சம் அதன் தனித்துவம் மிக்க நிலைக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது. ரிலாக்ஸ் மோட் கொண்டு இருக்கையை 40-டிகிரி அளவுக்கு ரிக்லைன் செய்து கொள்ள முடியும். Bentayga EWB மாடலில் பவர் க்ளோசிங் கதவுகள், ஹீடெட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் டோர், ஆல் வீல் ஸ்டீரிங் இடம்பெற்றுள்ளது. இந்த கார் மூன்று வித இருக்கை அமைப்புகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய Bentley Bentayga EWB வெர்ஷன் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட 180mm வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2995mm-ல் இருந்து 3175mm-ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது காரின் ஒட்டுமொத்த நீளம் 5322mm ஆகும். இதன் காரணமாக இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைத்திருக்கிறது. அதேநேரம், இதில் 7 இருக்கை இடவசதி இதில் வழங்கப்படவில்லை. புதிய பாலிஷ் செய்யப்பட்ட 22-இன்ச், 10-ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.