மத்திய அரசின் பணியிடங்களை நிரப்பும் SSC தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களை (MDS பணியிடங்கள்) நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.
இன்றோடு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், இணையதளம் முடங்கியதால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் கால அவகாசத்தை நீட்டித்து, பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 24.02.2023
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி – 26.02.2023
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில், SSC, MDS (Multi Tasking Staff) தேர்வு மற்றும் ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவு ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியதால், தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். இன்று கடைசி என்பதால், தேர்வர்கள் பலரும், விண்ணப்பிப்பதற்கான காலத்தை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் வைத்தனர்.
இந்நிலையில், ஒரு வார காலத்தை நீட்டித்து, பிப்ரவரி 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்
பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் – 529 பணியிடங்கள்
கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், பிரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான SSC, MDS தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முறை
இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.
முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.
ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் (Physical Efficiency Test) நடத்தப்படும்.
ssc.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.