இந்திய மக்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் டூவீலர்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல் டூவீலர்களை இயக்குவதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதுதான் இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டூவீலர்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் டூவீலர்களின் விலை அதிகம்.
எனவே மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட, நிறைய பேரால் எலெக்ட்ரிக் டூவீலர்களை வாங்க முடிவதில்லை. இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்காகவே புத்தம் புதிய தயாரிப்பு ஒன்று தற்போது களமிறங்கியுள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த தயாரிப்பு அமைந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பிரபலமான டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஜெமோபாய். இந்த நிறுவனம் தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ரைடர் சூப்பர்மேக்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ப்ளூ, கிராபைட் க்ரே, பிளாசிங் ரெட், ஸ்பார்க்கிளிங் ஒயிட், ஜாஸி நியான் மற்றும் ஃப்ளோசரண்ட் யெல்லோ என 6 கலர்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும்.
அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும். மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது AIS-156-க்கு இணக்கமான 1.8 kW பேட்டரி ஆகும். இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 100 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி பயன்படுத்துபவர்களுக்கு இந்த ரேஞ்ச் (Range) போதுமானதாக இருக்கும். நீங்கள் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், பயணம் செய்ய கூடிய தூரத்தைதான் ரேஞ்ச் என்கின்றனர். அதே நேரத்தில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் சிறப்பாக இருந்தாலும் மிகவும் மெதுவாகதான் பயணம் செய்யும். ஆனால் ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு சிறப்பாக உள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் நமக்கு போதுமான ஒன்றாக இருக்கும். இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஜெமோபாய் கனெக்ட் செயலி தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.
அத்துடன் பேட்டரி, வேகம் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும்? என்ற நினைவூட்டல்களையும் இது வழங்கும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. வெறும் 2,999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் (Booking) செய்து கொள்ளலாம்.
ஜெமோபாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Website) மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் (Dealerships) மூலமாகவோ புதிய ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஓரளவிற்கு குறைவான விலையில், தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், ஜெமோபாய் ரைடர் சூப்பர்மேக்ஸ் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.