கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இந்நிலையில் மதிய வேளையில் தயிர் சாதத்தை நிறைய பேர் அதிகம் சாப்பிடுவார்கள். அப்படி தயிர் சாதம் சாப்பிடும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று யோசித்தால், பாகற்காய் புளிக்காய் செய்து சாப்பிடுங்கள்.
இந்த பாகற்காய் புளிக்காய் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், உடலில் உள்ள புழுக்கள் அழிவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கியமாக பாகற்காயை உங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு இந்த புளிக்காய் செய்து கொடுங்கள், நிச்சயம் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய பாகற்காய் – 1
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு
* வெல்லம் – 1/4 கப்
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
செய்முறை:
முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பாகற்காயை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாகற்காயை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு 10 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, பாகற்காயுடன் சேர்த்து கிளறினால், சுவையான பாகற்காய் புளிக்காய் தயார்.