சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 பேருந்துகளை தனியார் இயக்க, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்ப்பில் 3,436 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள 625 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் 29.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னை மையமாக வைத்துதான் எல்லா வேலை வாய்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் பணிபுரியும் அதிகமானோர் பேருந்து சேவையைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் உலக வங்கி அளித்துள்ள பரிந்துரையில், ஒப்பந்த அடிப்படையில், 1000 பேருந்துகளை அறிமுகம் செய்யலாம் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மூலம், பேருந்துகளை இயக்க வழிவகை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
23சி (பெசன்ட் நகர்- அயனாவரம்), 12பி (வடபழனி- மெரினா), 91 (திருவான்மியூர் – தாம்பரம்) ஆகிய முக்கிய வழித்தடங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு உலக வங்கி, மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாடிற்கான சர்வதேச வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றிலிருந்து நிதி பெறப்படுகிறது.
இந்நிலையில் GCC எனப்படும் மாடலின் அடிப்படையில், தனியார் நிறுவனங்களுக்கு மாநகரப் போக்குவரத்து கழகம் டெண்டர் கோரியுள்ளது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் ஆகியோரை பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் இயக்கும் பேருந்துகள், ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இதுபோன்று தனியார் நிறுவனங்களிடம் அரசு போக்குவரத்து செல்லும்போது, டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.