ஆடவர் கிரிக்கெட்டில் 20 வருடங்கள் கழித்து ICC போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதவுள்ளன.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டைப் பரபரப்பான முறையில் நியூசிலாந்து அணி வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியா தகுதியடைந்துள்ளது.
ஜூன் 7-11 தேதிகளில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
2003-ல் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. இந்திய அணி 39.2 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை சாம்பியன் ஆனது.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ICC போட்டியின் இறுதிச்சுற்றில் மோதுவதற்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்தமுறை இறுதிச்சுற்றில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அதனால் இந்தமுறை கோப்பையை வெல்ல இந்திய அணியும் ரசிகர்களும் ஆவலாக உள்ளார்கள்.