சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் இன்று 11ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. இந்த பொதுத்தேர்வில் செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.
தேர்வு தேதிகள் நல்ல இடைவெளியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி தேர்வுக்கு படிக்க வசதியாக ஒவ்வொரு தேர்விற்கும் இடையில் இடைவெளி விடப்பட்டு உள்ளது. தேர்வு விவரம் 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கும். மொத்தம் 7.88 லட்சம் பேர் எழுத உள்ளனர். பிளஸ் 1 தேர்வுக்கான பள்ளி தேர்வு மையங்கள் 3,224. பிளஸ் 1 தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர்கள் 43,200. இந்த தேர்வுகளுக்கு 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனித்தேர்வர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்றபடி தேர்வு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. கைதிகள் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.
தண்டனைகள் என்ன?
மாணவர்கள் இந்த தேர்வில் காப்பி அடிக்கும் பட்சத்தில் அவர்கள் 1-2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. அந்த வருடம் அவர்கள் எழுதிய தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்படும். மொத்தமாக அவர்களின் தேர்வுகள் நீக்கப்பட்டு தடை விதிக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமிழ்நாடு முழுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை செய்வார்கள். வினாத்தாள் லீக் ஆகாமல் இருக்க கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
செய்ய வேண்டிய, செய்ய கூடாத விஷயங்கள்
-தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காக சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் செய்ய கூடாத விஷயங்கள்
-செல்போன் எடுத்து வர கூடாது
-காப்பி அடிக்க கூடாது
-மினி ஜெராக்ஸ் எடுத்து வர கூடாது
-கலர் சட்டை அணிந்து வர கூடாது (தனி மாணவர்களுக்கு பொருந்தாது)
-விடைத்தாள்களை மாற்றிக்கொள்ள கூடாது
-மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது
-தாமதமாக வரக்கூடாது
-ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக உள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தினை ரத்து செய்திட பரிந்துரை செய்யப்படும்
ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்
-ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
-ஆசிரியர்கள் போன் எடுத்து வரக்கூடாது
-தேர்வு நேரத்தில் தேர்வு அறையைவிட்டு வெளியேற கூடாது/
-தேர்வு அறைக்கு தாமதமாக வரக்கூடாது.
-தேர்வு நேரத்திற்கு முன்பாக வினாத்தாள் கொடுப்பதோ, தேர்வு முடியும் முன் விடைத்தாள்களை வாங்கவோ கூடாது.