ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள ‘செங்களம்’ தொடர், ட்ரைலர் ரிலீஸின் போதே மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. படக்குழுவினரும், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இக்கதை ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர் என கூறியதால், இதன் மீதிருந்த எதிர்பார்ப்பு மேலும் கூடியது. 9 எபிசோடுகளை கொண்ட ‘செங்களம்’ தொடர் எப்படித்தான் இருக்கிறது?
கதையின் கரு:
நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆசைப்படும் அரசியல் ஓநாய்கள்…3 கொலைகளை செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் அண்ணன் தம்பிகள், இன்னும் 2 கொலை செய்ய உள்ளதாக போலீசிடமே சவால் விடுகின்றனர்.. யார் இவர்கள்? நகராட்சி மன்ற தலைவர் சீட்டிற்கும் இவர்கள் செய்யும் கொலைகளுக்கும் என்ன சம்மந்தம்? விவரிக்கிறது ‘செங்களம்’ தொடர்.
‘செங்களம்’ தொடர், முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை, “அன்று ஒரு நாள்” “இன்று” என ஃப்ளேஷ்பேக்கிலும் நிகழ் காலத்திலும் பயணிப்பது போன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது. கதையின் முதல் நான்கு எபிசோடுகள் திருமணம், மரணம், கொலை என பயணிப்பதால் வேகமாகச்செல்கிறது. இதையடுத்து வரும் எபிசோடுகிளில் அரசியல் ஆதாயங்கள், பதவி ஆசை, அதற்காக செய்யப்படும் குற்றச்செயல்கள் என காண்பிக்கப்படுகின்றன.
தமிழில் இதுபோன்ற முழுநீள அரசியல்-த்ரில்லர் வருவது இதுவே முதல் முறை. அரசியலில் இருப்பவர்களுக்கு பதவியும் பவரும் எவ்வளவு பெரிய போதை என்பதை அப்பட்டமாக கூறியதற்காக, இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும். கதையின் சில திருப்பங்கள் எதிர்பாராதவையாகவும், பல திருப்பங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தவையுமாக இருந்ததால், இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான ட்விஸ்டுகளை கதையில் வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியலை, விருதுநகர் மாவட்ட நகராட்சியில் நடக்கும் உள்ளூர் அரசியலை போன்று காண்பித்த விதத்தில் ரசிகர்களின் மனதில் தேர்ச்சி பெறுகிறார், இயக்குனர்.
கடந்த 30 வருடங்களில் நம்ம ஊரில் நடைப்பெற்ற அரசியல் சம்பவங்களை கண்முன் நிறுத்தி விடுகிறது ‘செங்களம்’ தொடர்.