ஏப்ரல் 1 முதல் வணிக சிலிண்டர்களின் விலையில் 92 ரூபாய் குறைப்பு

நிதியாண்டின் முதல் நாளான இன்று ஏப்ரல் 1ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலையில் நிவாரணம் கிடைத்துள்ளது. சிலிண்டரின் விலை ரூ. 92 குறைந்துள்ளது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. இருப்பினும், வணிக சிலிண்டர்களின் நுகர்வோருக்கு மட்டுமே எல்பிஜி விலையில் இந்த நிவாரணம் கிடைத்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டரின் விலை கடந்த மாதத்தைப் போலவே உள்ளது. வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு மார்ச் மாதம் 350 ரூபாய் உயர்த்திய நிலையில் இன்று 92 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மார்ச் மாதத்தில், வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 350 ரூபாய் உயர்த்தப்பட்டது. 2022 ஏப்ரல் 1ஆம் தேதியன்று, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் ரூ.2,253க்கு கிடைத்தது. இன்று முதல் விலை ரூ.2,028 ஆக குறைந்துள்ளது. டெல்லியில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டரின் விலை கடந்த ஓராண்டில் ரூ. 225 குறைக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விலை டெல்லியில் ரூ. 2028 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 2132 ஆகவும், மும்பையில் ரூ. 1980 ஆகவும், சென்னையில் ரூ. 2192.50 ஆகவும் உள்ளது. வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டிருப்பது மக்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.