பொதுவாக அனைவருக்குமே இனிப்பு உணவு பொருட்கள் மிகவும் பிடித்தனமானது. அதிலும் பால் கொழுக்கட்டை என்றாலோ அனைவரின் வாயிலும் எச்சில் தான் ஊரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். நாம் பல விதமான பால் கொழுக்கட்டை செய்து இருப்போம். அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் கேரளா ஸ்டைல் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டியான தேங்காய் பால் 3 கப், அரிசி மாவு 1 கப், உப்பு – தேவையான அளவு, ஏலக்காய் – 6, தண்ணீர் – தேவையான அளவு, சர்க்கரை – அரை கப்.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு சுடு தண்ணீர் கொஞ்சம் கொங்சமாக சேர்த்து கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். நன்றாக பிசைந்ததும், கையில் சிறிதளவு தண்ணீர் தொட்டு அதை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து ஒரு பெரியத் தட்டில் எடுத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். தேங்காய் பால் நன்றாக கொதித்ததும், அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இதை 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
பிறகு 2 நிமிடம் கழித்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பிடித்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இப்போது ஏலக்காயை இடித்து அதில் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு 1 ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
பிறகு அதில் 1 கப் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கொதிப்பதற்கு முன் இறக்கினால் கேரளா ஸ்டைலில் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.!