மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், நூறு சதவீத இடங்களுக்கும், மத்திய அரசின் குழுவே கலந்தாய்வு நடத்தும் என, மத்திய சுகாதாரத்துறை மீண்டும் அறிவித்துள்ளது. நாடு முழுதும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில், 50 சதவீத இடங்கள்; இளநிலை மருத்துவப் படிப்புகளில், 85 சதவீத இடங்கள்; தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, நுாறு சதவீத இடங்களுக்கும், மத்திய அரசின் மருத்துவக் குழுவே மாணவர் சேர்க்கை நடத்தும் என, மத்திய சுகாதாரத்துறை மீண்டும் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மாணவர் சேர்க்கையில், அந்தந்த மாநில அரசுகளின் இடஒதுக்கீடு மற்றும் உள் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும்.
இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த, மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிகளை, மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிதாவது: இந்த அறிவிப்பால், தமிழகத்தில் உள் ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகும். மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை அடுத்த வாரம் சந்தித்து, விளக்கம் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.