அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கும் பும்ரா!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் மூலம் இந்திய வீரர் பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரித் பும்ரா தனியாளாக ஏராளமான போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளார். அவர் இல்லாததால் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணிக்காக கூட ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.


கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்தார். அதன்பின்னர் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டாக ஓய்வில் இருக்கிறார். இதையடுத்து லண்டனில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின் நீண்ட காலமாக ஓய்வில் இருந்தார். பின்னர் பயிற்சியை தொடங்குவதற்காக கடந்த ஏப்ரலில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பினார்.


அங்கு என்சிஏ தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கண் பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே இந்திய அணி அடைந்த தோல்விகள், ரசிகர்களிடையே கடுமையான விரக்தியை ஏற்படுத்தியது. இதனால் பும்ரா எப்போது மீண்டும் வருவார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆகஸ்ட் மாதத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதனால் முக்கியமான தொடர்களில் களமிறங்குவதற்காக பும்ரா தயாராக இருப்பார் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.