“ராமாயணத்தை புரிந்து கொள்ளும் திறன் யாருக்குமே இல்லை!” - ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் ஓம் ராவத்

‘ஆதிபுருஷ்’ இயக்குநர் ஓம் ராவத் “ராமாயணத்தை யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. அப்படி யாராவது புரிந்துகொண்டதாக சொன்னால் அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள்” என ‘ஆதிபுருஷ்’ படத்தின் இயக்குநர் ஓம் ராவத் தெரிவித்துள்ளார்.

‘ஆதிபுருஷ்’ படத்துக்கான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், “பாக்ஸ் ஆஃபீஸில் படம் எந்த மாதிரியான வரவேற்பை பெறுகிறது என்பதுதான் முக்கியம். அந்த வகையில் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் படம் வசூலில் முன்னேறி வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் ராமாயணத்தை புரிந்துகொண்டேன் என்று சொன்னால் அது மிகப்பெரிய தவறு. ஏனென்றால், ராமாயணத்தை புரிந்துகொள்ளும் திறன் யாருக்குமே இல்லை.

நான் எந்த அளவுக்கு ராமாயணத்தை தெரிந்துகொண்டேனோ, நீங்கள் அதை எந்த அளவுக்கு புரிந்துகொண்டீர்களோ, எல்லாமே சிறுபகுதி தான். ராமாயணத்தைப் பற்றி நான் புரிந்துகொண்ட அந்தச் சிறு பகுதியை செல்லுலாய்டில் சித்தரிக்க முயற்சித்தேன். ராமாயணம் மிகப் பெரியது. அதை முழுமையாக புரிந்துகொள்வது இயலாத காரியம். அதை யாராவது முழுமையாக புரிந்துகொண்டதாக சொன்னால் அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் அல்லது பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்” என்றார்.