உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கிடைக்கும். இது வருமான வரிச் சட்டத்தின்படி உங்கள் வருமானம். உங்கள் முழு வருமானத்திற்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது. இதில் சம்பளம் மட்டுமல்லாமல், சேமிப்பிலிருந்து வரும் வட்டி, வீட்டில் இருந்து சம்பாதிப்பது, சைட் பிசினஸ், மூலதன ஆதாயம் என பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஆனால் வருமானம் வரி வரம்பிற்குள் வராத சில ஆதாரங்கள் உள்ளன. விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தவிர, பல வருமானங்கள் வரி வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. வரி நிபுணர்களின் கூற்றுப்படி, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10, அத்தகைய வரி விலக்கு வருமானம் பற்றி குறிப்பிடுகிறது.
2023 பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பின் கீழ் வரி அடுக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. இதற்கு முன், 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைத்தது. தற்போது ரூ.7 லட்சமாக அது உயர்த்தப்பட்டுள்ளது. சம்பளம் வாங்குபவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இது தவிர, சில வருமானங்களுக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
விவசாயத்தின் மூலம் வருமானம்:
இந்தியா ஒரு விவசாய நாடு. நாட்டில் விவசாய துறையை மேம்படுத்துவதற்காக, வருமான வரிச் சட்டம் 1961-ல், விவசாயத்தின் வருமானம், வருமான வரி வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. உங்களிடம் விவசாய நிலம் இருந்தால், நீங்கள் விவசாயம் அல்லது அது தொடர்புடைய விஷயங்களில் சம்பாதிக்கிறீர்கள் என்றால், அந்த வருமானத்திற்கு நீங்கள் எந்த வகையிலும் வரி செலுத்த வேண்டியதில்லை.
இந்து பிரிக்கப்படாத குடும்பத்திலிருந்து பெறப்பட்ட தொகை (HuF):
இந்து பிரிக்கப்படாத குடும்பத்திலிருந்து (HuF) பெறப்பட்ட தொகை வருமான வரி வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய வருமானம், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(2)-ன் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் குடும்ப வருமானம், அசையா சொத்துக்கள் அல்லது மூதாதையர் சொத்து மூலம் வருமானம் ஆகியவற்றிற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று இந்த பிரிவில் கூறப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டி:
உங்கள் சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி கிடைக்கும். இது வருமான வரிச் சட்டத்தின்படி உங்கள் வருமானம். இதில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80TTA-ன் படி வருமான வரி விலக்கு பெறலாம். சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி இருந்தால், அதிகப்படியான தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
பணிக்கொடை மீதான வரி விலக்கு:
ஒரு ஊழியர் மத்திய அல்லது மாநில அரசில் பணிபுரிந்தால், அவர் பெறும் பணிக்கொடைக்கு முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியருக்கு வரி விதிகள் வேறுபட்டவை.
VRSஇல் பெறப்பட்ட தொகை:
வருமான வரிச் சட்டத்தின் 2BA விதியின் கீழ், ஐந்து லட்சம் ரூபாய் வரை VRS ஆகப் பெறும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஸ்காலர்ஷிப், விருது:
ஒரு மாணவர் ஸ்காலர்ஷிப் பெற்றால், அது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (16)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் தொகைக்கு வரம்பு இல்லை.