லியோ படத்தில் இடம் பெற்ற ‘நா ரெடி’ பாடல் சர்ச்சையான நிலையில் அது தொடர்பாக படக்குழு அதிரடி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், ஜோஜூ ஜார்ஜ் என இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் லியோ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் 3 மாதங்களும், அதனைத் தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது இன்னும் சில நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அடுத்தடுத்து இனி லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியானது. இதனை விஷ்ணு எடாவன் எழுதிய நிலையில், நடிகர் விஜய் , ராப் பாடகர் அசல் கோலார் இருவரும் பாடியிருந்தனர். இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கடும் சர்ச்சைகளையும் சந்தித்தது. ஜூன் 16 ஆம் தேதி வெளியான லியோ பட போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்த மாதிரி காட்சி இடம் பெற்றிருந்தது.
தொடர்ந்து ‘நா ரெடி’ பாடலில் மது, போதைப் பொருள் தொடர்பான வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தது. இதற்கு இணையவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் முன்னணி நடிகர் ஒருவரே இப்படி நடந்து கொள்ளலாமா எனவும் கேள்வி எழுப்பினர். இதனிடையே சென்னை காவல் ஆணையரிடம் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார். அதில் போதைப் பொருள் பழக்கம், ரௌடியிசத்தை உருவாக்கும் வகையில் நா ரெடி பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்கத்தை ஏற்படுத்தும். எனவே நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நா ரெடி பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் “புகை பிடித்தால் புற்றுநோய் உண்டாகும். உயிரைக் கொல்லும்’ ஆகிய எச்சரிக்கை வாசகங்களை படக்குழு இடம் பெற செய்துள்ளது. இதன்மூலம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.