ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய உள்ள குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். தமிழ் திரை உலகில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டி பறந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். 1980 ஆண்டு ‘பல்லவி அனு பல்லவி’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி அடைந்தால், சினிமா துறையை விட்டு ஒதுங்கி விடலாம் என்று நினைத்தவருக்கு மோகன், ரேவதி நடிப்பில் வெளியான ‘மௌனராகம்’ ஒரு அடையாளத்தை கொடுத்து மணிரத்னத்தை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டது.
தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து, சுமார் 35 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் அவர் கோலோச்சி வருகிறார் மணிரத்னம். திரைப்படத்துறையில் அவருடைய சேவையை பாராட்டி பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் அமரர் கல்கியின் பொன்னியின் நாவலை அடிப்படையாக வைத்து ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தை இயக்கி தனது நீண்ட நாள் கனவை நினைவாக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் வெற்றி பெற்று, வசூலையும் அள்ளி மணிரத்னத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
‘பொன்னியின் செல்வன்’ படம் கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கும் மணிரத்னத்தை மேலும் குஷிப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான செய்தியை ஆஸ்கர் குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஆஸ்கர் தேர்வு குழு பட்டியலில் இயக்குனர் மணிரத்னத்தின் பெயர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான விருது குழுவில் இடம்பெற 398 பேருக்கும் ஆஸ்கர் அகாடமியின் CEO பில் க்ரெமர் மற்றும் அதன் தலைவர் ஜெனட் யங் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இயக்குனர்கள் பிரிவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் பிரிவில் ராம் சரண், ஔிப்பதிவாளர் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஔிப்பதிவாளர் கே.கே. செந்தில்குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஏஆர் ரஹ்மான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.