தமிழகத்திற்கு புதிய டிஜிபியும் சென்னைக்கு புதிய காவல் ஆணையரையும் நியமித்தது தமிழக அரசு...!

தமிழக டிஜிபியாக பொறுப்பு வகிக்கும் சைலேந்திரபாபு விரைவில் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாக கொண்ட சங்கர் ஜிவால், 1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல தலைவராகவும் இருந்துள்ளார். உளவுத்துறை ஐஜியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப் படையின் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டு காலமாக பணியாற்றி வந்தார். சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கத்தை 2007 ஆம் ஆண்டும், குடியரசுத் தலைவர் காவலர் பதக்கத்தை 2019 ஆம் ஆண்டும் பெற்றவர். அதேபோல் சென்னையின் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ளார்.