3 ஆண்டுகளுக்கு சினிமாவிலிருந்து விஜய் ஓய்வு!

வெங்கட் பிரபு படத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து நடிகர் விஜய் 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் சமீபத்தில் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
இதனையடுத்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கவிருப்பதாகவும் அடுத்தாண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
வெங்கட் பிரபு படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் ஓய்வெடுக்கவிருப்பதாவும் எந்த படங்களிலும் நடிப்பதில்லை எனவும் விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்ற தேர்தல் வரை விஜய் சினிமாவில் இருந்து இடைவெளி எடுக்கவிருப்பதாக விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.