படியுங்கள்..! அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யா பெருமிதம்
அகரம் பவுண்டேஷன் உதவியுடன் படித்து டாக்டர் ஆன மாணவர் ஒருவர் தற்போது உலக சுகாதார மையத்தில் வேலை பார்த்து வருவதாக நடிகர் சூர்யா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி வருகிறார். பல ஆண்டுகளாக இவரது அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் தங்கள் கல்வி கனவை நனவாக்கி வருகின்றனர்.
அதேபோல் கடந்த 44 ஆண்டுகளாக சூர்யாவின் தந்தையான நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் பெற்றோரை இழந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், அகரம் விருது விழா நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவக்குமார், அவரது மகன்கள், கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரும் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கினர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா ஒரு நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துகொண்டார். அகரம் அறக்கட்டளையின் உதவியுடன் மருத்துவம் பயின்ற மாணவர் ஒருவர் தற்போது உலக சுகாதார மையத்தில் வேலை செய்வதாக கூறி நெகிழ்ச்சி அடைந்தார். அகரம் மூலம் படித்து டாக்டர் ஆன முதல் மாணவரான அவரின் வளர்ச்சி வியப்பளிப்பதாக சூர்யா கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரம் பவுண்டேஷன் கல்விப் பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். சரியான சமமான கல்வி வாய்ப்பிற்கான ஒத்த கருத்துடைய மனிதர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து அகரம் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
பின்தங்கிய கிராமங்களில், முதல் தலைமுறை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள், அவர்கள் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எந்த சூழ்நிலையில் படித்து இந்த மார்க் வாங்கி இருக்கிறார்கள் என பார்த்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று பரிசு அளிக்கப்பட்டது.
கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாகும், இளம் பருவத்தினரில் ஒரு சிலரது வாழ்க்கை கனவுகளை நனவாக்கும் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட அகரம் விதைத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளில் 5200 மாணவ மாணவியர் கல்லூரி கல்வி வாய்ப்பை தமிழகம் குறிப்பாக கடற்கரை பகுதிகள், மலை கிராம பகுதிகள், அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது.
சமுதாய மாற்றத்திற்கு கல்வி தான் அவசியம், கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள். வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதையும் தாண்டி புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். தன்னார்வலர்களால் தான் இன்று அகரம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அரசும் அகரத்திற்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு சூர்யா பேசினார்.