அனைத்து நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய திருத்தலம்!

ஒவ்வொரு மனிதரின் பிறப்புக்கும் அடிப்படையாகிறது அவர் பூமியில் ஜனிக்கும் நேரத்தின் நட்சத்திரங்கள். இறைவனின் கீழ் மனிதரின் தலைவிதியை எழுதும் பரிபாலகர்களாக செயல்படுபவர்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது, ஆகியோர். இந்த ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் அமர்ந்து 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. ஆகவேதான் நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட அவரவர் ஜென்ம நட்சத்திர நாளன்று நட்சத்திரங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும் என்று சொல்வார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

ஆனால், தற்போது உள்ள சூழலில் ஒவ்வொருவரும் தங்கள் நட்சத்திர ஸ்தலங்களைத் தேடிப்பிடித்து சென்று வருவது இயலாதது. ஆனால் 27 நட்சத்திரங்களும் ஒரே இடத்தில இருந்தால்? ஆம். வேறெங்கும் இல்லை. சென்னையின் வடகோடியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்தான். அது திருவொற்றியூர் என்றும் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில்தான் 27 நட்சத்திரங்களும் அமர்ந்து அருள் புரிகின்றனர்.

இந்தத் தலம் உருவான இறை வரலாறு சுவாரஸ்யம். ஆம். பிரளயகாலம் வரும்போதெல்லாம் உலகம் அழியும். பின் பிரம்மனின் படைப்பில் உயிர்கள் மீண்டும் தோன்றும். ஒரு பிரளய காலத்தில் உலகம் அழியும் வேளை நெருங்க மீண்டும் அத்தனை உயிர்களையும் படைக்க வேண்டி இருப்பதை விரும்பாத பிரம்மதேவன் உலகை அழிக்காதிருக்கும்படி சிவபெருமானை நோக்கி யாகம் வளர்த்து தவம் செய்கிறார். அந்த யாக நெருப்புக்கு நடுவே அக்னி வடிவில் எழுந்தருளிய சிவபெருமான் பிரம்மதேவனின் விருப்பத்திற்கு இணங்க பிரளய காலத்தில் ஒற்றியூர் பகுதியை மட்டும் விடுத்து அனைத்து உயிர்களையும் அங்கு தங்க வைத்துக் காத்ததாகவும் பிரளய காலம் முடிந்து உலகம் இயங்க ஆரம்பித்ததும் சிவனும் புற்று வடிவில் இங்கு வந்து தங்கி விட்டதாகவும் வரலாறுகள் தெரிவிக்கிறது.

ஆதிலிருந்து வீற்றிருக்கும் சிவன் என்பதால் இந்த தளத்துக்கு ஆதிபுரீஸ்வரர் என்றும் புற்று வடிவில் வீற்றிருப்பவர் என்பதால் “படம்பக்கநாதர்” என்று அழைக்கப்படுகிறார். பிரளய காலத்தில் தப்பியதால் ஒற்றையூர் எனவும், இங்கு வந்து சிவன் தங்கியதால் திரு இணைந்து திருவொற்றியூர் எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

இந்தத் தலத்தில் நந்திக்காக சிவபெருமான் தாண்டவம் ஆடினாராம். ஸ்ரீ விஷ்ணு சிவபெருமானின் நடனம் பார்க்க விரும்ப அவருக்காகவும் சிவதாண்டவம் இங்கு நிகழ்ந்துள்ளது. சமயக்குரவரான சுந்தரரின் காதலுக்காக இங்கு தியாகராஜ சுவாமி தூது வந்துள்ளார். இந்த காதலுக்கு சாட்சியாகவும் நின்றுள்ளார். தியாகராஜர் வந்து தங்கியதால் தியாகராஜர் கோவில் என்று அழைக்கும் வழக்கம் வந்தது. கோவில் இருக்கும் பகுதியின் பெயரும் தியாகராஜபுரம் ஆனது என்கின்றனர்.

அருள்மிகு ஆதிபுரீஸ்வரரை 27 நட்சத்திரங்களும் வந்து வணங்கி வழிபட்டு இருப்பதற்கு இங்குள்ள சிவலிங்கங்கள் சாட்சி. ஒவ்வொரு நட்சத்திரமும் இந்த ஸ்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வணங்கி சிவபெருமானின் ஆசிகளை பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதற்கு சான்றாக கோவிலின் பரந்து விரிந்த வெளி பிரகாரத்தில் தெற்கில் உள்ள நந்தவனப் பகுதிக்கு பின்புறமாக நட்சத்திரங்கள் அனைவரும் பூஜித்த 27 சிவலிங்கங்களுக்கும் தனித்தனி சந்ததிகள் உள்ளன. இதுபோன்ற அமைப்பு வேறு வேறு எந்த சிவன் கோவிலிலும் காண கிடைக்காதது.

ஒரு சன்னதியில் பிள்ளையாரும் முருகனும் உள்ளனர். கடைசியாக இந்தப் பகுதியின் காவல் தெய்வமான வளர்காளி சன்னதி வருகிறது. தொடர்ந்து இருக்கும் இந்த நட்சத்திர சன்னதிகளில் பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்தன்று அவரவர் நட்சத்திரத்துக்கான சிவலிங்கத்துக்கு அபிசேகத்துடன் சக்கரைப்பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் பிள்ளைப்பேறு கல்வி ஆகியவை அமைந்து நன்மைகளைப் பெறலாம். நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில் உள்ள பதாகைகள் நமக்கு உதவும்.