இனி SUVன்னா அது ஹோண்டா எலிவேட் கார் தான்! விரைவில் சந்தைக்கு வருகிறது..!

இந்திய சந்தையில் சில குறிப்பிட்ட வாகன உற்பத்தியாளர்களுக்கென்று தனி வரவேற்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் விருப்பமும், நம்பிக்கையும் தான். அந்த வகையில், பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் மாபெரும் இடத்தை ஆக்கிரமித்துள்ள ஹோண்டா நிறுவனம், பெரும்பாலான மக்களின் விருப்ப தேர்வாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் அவ்வப்போது புது புது வாகன வகைகளை அறிமுகம் செய்து தனது வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைக்கும். அந்த வகையில், தற்போது ஹோண்டா எலிவேட் என்கிற புது மாடல் காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இந்தியாவில் ஹோண்டாவின் எலிவேட் மாடல் கார் நல்ல வரவேற்பை பெறும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாடல் மற்ற நாட்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில் 43 சதவீத பங்கை SUV வகை கார்கள் கொண்டிருந்தது என்பது அதன் முக்கியத்துவத்தை உணர்த்திக்கிறது. எனவே, தான் ஹோண்டா இந்த SUV சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முயற்சிக்கிறது. ஹோண்டா எலிவேட் காரின் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

ஹோண்டா எலிவேட் கார் மாடலின் வெளியீட்டு தேதி என்பது செப்டம்பர் மாதம் என அறிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் இந்த மாடல் கார் குறித்த நேரத்திற்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சரியான வெளியீட்டு தேதி குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த எலிவேட் காருக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. இதற்கான முன்பதிவை செய்ய ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகலாம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் வழியாக ரூ .11,000 டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தனது வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் ஹோண்டா நிறுவனம் எலிவேட் மாடலுக்கான விலையை நிர்ணயித்து உள்ளது. மேலும், தனது வாடிக்கையாளர்கள் மற்ற பிராண்டை நோக்கி செல்லாதிருக்கவும் இது தனது விலையை குறைத்துள்ளது. அதன்படி, இந்த மாடல் காரின் விலை ரூ.10.50 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் பெற்று கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எலிவேட் மாடலில் 1.5 லிட்டர் ஐ-வி.டி.இ.சி டோஹெச் பெட்ரோல் எஞ்சின் தரப்பட உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், ஹோண்டா சிட்டி மடலிலும் இதே எஞ்சினை பொறுத்த உள்ளது. இந்த எஞ்சின் 121ps அதிகபட்ச சக்தியும், 145Nm உச்ச முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. மேலும், இது 6-வேக எம்டி அல்லது 7-ஸ்பீடு சி.வி.டி உடன் இணை சேர்கிறது. இதன் அதிகபட்ச மைலேஜ் 17 கி.மீ. என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலில் வேறெந்த ஹைபிரிட் விருப்பமும் கிடையாது.

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட், டொயோட்டா அர்பன் குரூசர், ஸ்கோடா குஷக், வோல்க்ச்வான் டைகன் போன்ற நடுத்தர அளவிலான எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக இந்த எலிவேட் கார் சந்தையில் களம் இறங்குகிறது. எனவே, ஹோண்டா நிறுவனம் இதன் விலையில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.