டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் அறிமுகமானது! என்னது விலை கம்மியா..?

பஜாஜ் (Bajaj) – டிரையம்ப் (Triumph) கூட்டணியில் தயாரிக்கப்பட்ட மோட்டார்சைக்கிளே டிரையம்ப் ஸ்பீடு 400 (Tiumph Speed 400) ஆகும்.
மிக பெரிய அளவில் இந்த பைக்கிற்கு எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், சென்ற மாதம் 5ஆம் தேதி அன்று இந்த பைக் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாக இந்த மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 2.23 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இது ஓர் அறிமுக சிறப்பு சலுகை விலை மட்டுமே ஆகும். அதாவது, முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை விலை பொருந்தும்.

இதற்கு பின்னர் வாங்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப் ஸ்பீடு 400, 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என நிறுவனம் அறிவித்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேநேரத்தில், டிரையம்ப் ஸ்பீடு 400க்கு பத்தாயிரத்தையும் தாண்டி புக்கிங்கைக் குவிந்துக் கொண்டு இருக்கின்றது. மேலும், இதன் விலையும் ரூ. 2.33 லட்சமாக உயர்ந்தும் பல நாட்கள் ஆகின்றன. இந்த நிலையிலேயே தற்போது ஸ்பீடு 400 மோட்டார்சைக்கிளின் டெலிவரி பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக தற்போது மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலேயே டெலிவரி பணிகள் தொடங்கி இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நகரங்களிலும் இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இப்போது இந்த பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பின் காரணத்தினால் 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கின்றது. ஆமாங்க, ஸ்பீடு 400 பைக்கை கைகளில் பெற குறைந்தபட்சம் 4 மாதங்களாவது காத்திருந்தே ஆக வேண்டும் என்கிற சூழலே தற்போது நிலவுகின்றது.
அடுத்தடுத்து வரும் நாட்களில் இது இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர டிரையம்ப் பைக்குகளுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியில் பஜாஜ் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் கீழ் 15 டிரையம்ப் விற்பனையகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 

இதை வரும் அக்டோபர் மாதத்திற்கு 50 ஆகவும், 2024 மார்ச் மாதத்திற்குள்ளாக 80க்கும் மேற்பட்ட நகரங்களில் 100க்கும் அதிகமான விற்பனையகங்களை உருவாக்குவதே நிறுவனத்தின் தற்போதைய இலக்காக இருக்கின்றது. டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்குடன் சேர்த்து ஸ்கிராம்பளர் 400 எனும் மோட்டார்சைக்கிள் மாடலும் அன்றைய தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இது இன்னும் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இதன் வருகை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு பைக்குகளிலும் 398 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 39.5 பிஎச்பி பவரையும், 37.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய அதீத திறனை வெளியேற்றக் கூடிய மோட்டார்சைக்கிளாகவே டிரையம்ப் 400 விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதனாலும், மலிவு விலை காரணத்தினாலும் இந்த பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. டிரையம்ப் ஸ்பீடு 400 மோட்டார்சைக்கிளின் வருகையால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்கள் மற்றும் இன்னும் பல நிறுவனங்களின் கிளாசிக் ரக இருசக்கர வாகனங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனையில் அது நல்ல வளர்ச்சியைக் காணத் தொடங்கி இருக்கின்றது. பஜாஜ் – டிரையம்ப் நிறுவனங்களுக்கு ஆச்சரியத்தை வழங்கும் வகையில் புதிய பைக்கிற்கு நல்ல விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.