முதல் போட்டியிலேயே டிராவிட், முரளி விஜய் சாதனையை சமன் செய்த திலக் வர்மா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி டிரினிடாட்டில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் மிடில் ஆர்டர் திலக் வர்மா ஆகியோர் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவிக்க பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அறிமுகமான திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்களை அடித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக சர்வதேச டி20 கரியரை சூரியகுமார் யாதவ் சிக்சருடன் ஆரம்பித்தது போன்றே இவரும் தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்த சிக்சரை அடித்து அதிரடியாக ஆரம்பித்தார்.

அதோடு இந்த போட்டியில் மூன்று சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்த திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வீரராக டிராவிட் மற்றும் முரளி விஜய் ஆகியோர் படைத்த தனித்துவமான சாதனையுடன் இணைந்துள்ளார்.
அந்த வகையில் வெளிநாட்டில் டி20 அறிமுகப்போட்டியில் பங்கேற்ற டிராவிட் மற்றும் முரளி விஜய் ஆகியோர் 3 சிக்ஸர்களை அவர்களது முதல் போட்டியில் அடித்து அசத்தி இருந்தனர். அதேபோன்று தற்போது திலக் வர்மாவும் வெளிநாட்டு டி20 அறிமுகப்போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகி மூன்று சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.