சாலை ஓரங்களிலும், குப்பைமேடுகளிலும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் இந்த குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள், ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரியாமல் இருக்கலாம். குப்பைமேனி, களைச்செடியாகவும் பெரும்பாலோரால் கைவிடப்பட்ட செடியாகவும் இன்று இருப்பது வருத்ததிற்குரியது. பலவகைப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக திகழும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு.
குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது என்றபோதிலும் இதன் இலையில் இருந்து கிடைக்கும் சாறு மிகச்சிறப்பு வாய்ந்தது. குப்பைமேனி பலவகைப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அவை என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து உட்கொள்வதனால் சளி, வறட்டு இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். உடல் உஷ்ணத்தை சரி செய்யலாம்.
குப்பைமேனி இலையில் சாறு பிழிந்து, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க மலத்தை நன்றாக இளக்குவதோடு, வயிற்றில் உள்ள புழுக்களையும் அழித்து வெளியேற்றும். குப்பை மேனி இலை பொடியை விளக்கெண்ணெயில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் செத்து மடியும்.
குப்பைமேனி இலை சாறு உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்து, இரத்த அழுத்தத்தால் உண்டான வாத நோய் குணமாகும், Allergy என்று சொல்லக்கூடிய ஒவ்வாமை நோய் சீராகும். குப்பைமேனி சாறு உட்கொள்ளும் போது சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தி உண்டாகலாம்.
சொத்தைப் பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி ஏற்படும் போது இரண்டு அல்லது மூன்று குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி சொத்தைப்பல்லில் வைத்தால் சொத்தைப்பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.
படை, சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவிவர நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். தீயினால் ஏற்பட்ட புண்களும் விரைவில் குணமாகும். உடல் முழுவதும் வலி ஏற்பட்டு அவதிப்படுபவர்களுக்கு குப்பைமேனி இலையின் சாற்றை, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம். வயதான தாத்தா, பாட்டிகளுக்கு, கால் மூட்டுகளில் ஏற்படும் வலியுடன்கூடிய வீக்கங்களுக்கு, குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து பூசலாம்.
சர்கரைப்புண் உள்ளவர்கள் தினமும் குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து புண்ணில் பூசிவர புண் ஆறும். வயதான பெரியோர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு உண்டாகும் படுக்கைப்புண் உள்ளவர்கள், குப்பைமேனி இலையுடன் சிறிது வேப்ப எண்ணெய் கலந்து அரைத்து புண்களில் பூசிவர படுக்கைப்புண் நீங்கும்.
தேள், பூரான், விஷபூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும். கருஞ்சிவப்பு நிறத்துடன் தொடை இடுக்குகளில் அரிப்புடன் வரும் படர்தாமரை பிரச்னைக்கு குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு கூட்டி தடவி வர, நோயின் தீவிரம் குறையும். மூலிகை மருத்துவத்துடன் நல்ல சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால் படர்தாமரைக்கு நிரந்தர முடிவு கட்டலாம்.
குப்பைமேனி செடியை வேருடன் எடுத்து வந்து வீடுகளில் வளர்க்கலாம். குப்பைமேனி அடிக்கடி கிடைக்கப்பெறாதவர்கள், குப்பைமேனி இலைகளை நிறைய பறித்து கொண்டு வந்து அதனை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். ஆனாலும் குப்பைமேனியை பச்சையாக உபயோகிப்பது சிறந்தது.