சந்திரயான் திட்ட சாதனைகளுக்கு துணைபுரிந்த தமிழர்கள்!

இஸ்ரோ இதுவரை மேற்கொண்ட 3 சந்திரயான் திட்டங்களிலும் தமிழர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். இதேபோல, மங்கள்யான் திட்டத்திலும் சாதித்துள்ளனர். 2008-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 1 திட்டத்தின் இயக்குநராக இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தாவடியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, பதினோராம் வகுப்பு வரை தனது அடிப்படைக் கல்வியை தாய் மொழியான தமிழில் அரசு பள்ளிகளிலேயே படித்தார். புகுமுக வகுப்பை பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியிலும், பொறியியல் இளநிலை பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரியிலும், பொறியியல் முதுநிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்த அவர், பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவர், இஸ்ரோ இயக்குநர் என முக்கிய பொறுப்புகளை வகித்த மயில்சாமி அண்ணாதுரை, முதன் முதலில் இந்தியா நிலவுக்கு அனுப்பிய விண்கலமான சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்ததுடன் 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.2019-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக இருந்தவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. சென்னையைச் சேர்ந்த முத்தையா வனிதா தான் சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக செயல்பட்டார்.

அப்போது அவர், இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கிய சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலும் தமிழ்நாட்டை சேர்ந்தவரே. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் 1978- ஆம் ஆண்டு பிறந்தவர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை அவர் முடித்தார். பின்னர் பாலிடெக்னிக்கில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., பட்டம் பெற்றார். திருச்சி REC கல்லூரியில் எம்.இ., பட்டம் பெற்றார். 

2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்காற்றினார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 2013-ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட மங்கள்யான் திட்டத்தின் இயக்குநரான சுப்பையா அருணன், நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். திருக்குறுங்குடி பள்ளி மற்றும் பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் படித்த சுப்பையா அருணன், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984 ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கிய அவர், மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் மருமகன் ஆவார்.இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வெற்றியும் பெற்றார் சுப்பையா அருணன்.

இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் பங்காற்றிய மயில்சாமி அண்ணாதுரை, முத்தையா வனிதா, வீரமுத்துவேல், சுப்பையா அருணன் போன்ற தமிழர்களால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே பெருமை கொள்கிறது என்றால் அது மிகையல்ல.