ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனிற்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. இலங்கையின் பல்லாகலே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (11), சுப்மன் கில் (10), விராட் கோலி (4) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் (14) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த இஷான் கிஷன் – ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை வதம் செய்த இஷான் கிஷன் 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார். போட்டியின் தேவையை உணர்ந்து பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா (14), ஷர்துல் தாகூர் (3), குல்தீப் யாதவ் (4) மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் (16) ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால் 48.5 ஓவரில் 266 ரன்கள் எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 81 ரன்கள் குவித்த இஷான் கிஷனிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அதிக அழுத்தம் நிறைந்த போட்டியில், அதுவும் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கி பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியையும் கரை சேர்க்க உதவிய இஷான் கிஷனை முன்னாள் வீரர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.