அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு குறைந்த ரிஸ்க் முதலீட்டு விருப்பங்களை வழங்குகின்றன.
இந்த திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. இந்த அஞ்சல் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. தபால் அலுவலகக் கணக்கைத் திறப்பது மிகவும் எளிதானது. ஆனால், நீங்கள் கணக்கைத் திறப்பதற்கு முன், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சேமிப்புத் திட்டங்களின் பலன்களைப் பெற, உங்கள் அஞ்சலகக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். சிறு சேமிப்புக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆகும்.
தபால் அலுவலக கணக்கு முடக்கப்படும்
இந்த காலக்கெடுவிற்கு முன்னர் மக்கள் தங்கள் அஞ்சலக கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்கத் தவறினால், தபால் அலுவலகக் கணக்கு செயலிழக்கப்படும். அஞ்சலக சேமிப்புத் திட்டத்திற்கான கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க முடியவில்லை என்றால், வேறு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அஞ்சலக கணக்குடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
உங்கள் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற ஏதேனும் சிறு சேமிப்புத் திட்டங்களை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க முடியாவிட்டால், உங்கள் கணக்கு முடக்கப்படும். முதலீட்டு விருப்பங்களின் எந்த பலனையும் நீங்கள் பெற முடியாது.
ஆதார் இணைப்பு விதிகள்
சமீபத்திய அறிவிப்பில், புதிய முதலீட்டாளர்கள் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை அவர்களின் சிறு சேமிப்புத் திட்டக் கணக்குகளுடன் இணைப்பது கட்டாயம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கும் இந்தக் காலம் பொருந்தும். “டெபாசிட் செய்பவர் ஏற்கனவே கணக்கு தொடங்கி, கணக்கு அலுவலகத்தில் ஆதார் எண்ணை சமர்ப்பிக்கவில்லை என்றால், ஏப்ரல் 1, 2023 முதல் ஆறு மாதங்களுக்குள் ஆதார் அட்டையை தனது தபால் அலுவலகக் கணக்குடன் இணைக்க வேண்டும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 30 கடைசி தேதி.
உங்கள் அஞ்சலகக் கணக்கில் இருப்புத் தொகை ரூ. 50,000-ஐத் தாண்டினாலோ அல்லது ஒரு மாதத்தில் அக்கவுண்ட்டில் இருந்து செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள் மற்றும் இருப்புகளின் தொகை ரூ. 10 ஆயிரத்தைத் தாண்டினாலோ போஸ்ட் ஆஃபீஸ் சிறுசேமிப்புக் கணக்குடன் பான் இணைப்பது கட்டாயம். ஒரு நிதியாண்டிற்கான கணக்கில் உள்ள அனைத்து வரவுகளின் மொத்தத் தொகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால், பான் இணைப்பு கட்டாயமாகும்.
ஆதாரை இணைப்பது எப்படி?
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுடன் ஆதாரை இணைக்க பல வழிகள் உள்ளன. செயல்முறையைத் தொடங்க, ஆதார் அட்டை மற்றும் கடவுச்சொல்லுடன் அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளைக்குச் செல்லலாம். அதுமட்டுமின்றி, உங்கள் வங்கிக் கணக்கில் உள்நுழைந்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு சேமிப்புத் திட்டத்தை இணைக்கலாம்.
கணக்கு முடக்கப்பட்டால் என்ன ஆகும்?
உங்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் டெபாசிட் செய்ய முடியாது. முதலீட்டின் முதிர்வு பலன்களைப் பெற வாய்ப்பு இருக்காது. உங்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது.