வரன்முறை இல்லாத மனைகளுக்கு இனி அடிப்படை வசதிகூட கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் எவ்வித மேம்பாட்டு வசதிகளையும் நிச்சயம் அரசு சார்பில் செய்யப்படாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சென்னையைச் சேர்ந்த அருண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் வரன்முறை செய்யாத அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அருணன் தனது மனுவில் கூறுகையில், “மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் வீட்டு மனைகள் விற்கப்படுகின்றன. தமிழ்நாடு சட்டவிதிகளின் அடிப்படையில் வரன்முறை செய்யப்படாமல் இந்த வீட்டுமனைகள் விற்கப்படுகின்றன. ஆனால் பொதுவாக வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் அரசின் செலவில் சாலைகள் மற்றும் மேம்பாட்டு வசதிகளை செய்யக் கூடாது என்று தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுகளை மீறி, மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து, தனியார் சொத்துகளை மேம்படுத்தும் வகையில் சாலை அமைத்து வருகிறார்கள். எனவே, தமிழக அரசின் உத்தரவிற்கு எதிராகச் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் அருணன் கூறியிருந்தார். ரியல் எஸ்டேட்டே மாறுது.. சென்னை, கோவையில் உச்சாணிக்கு உயரும் வீட்டு விலைகள்.. திடீர்னு வந்த அறிவிப்பு இதேபோல, தமிழகம் முழுவதும் வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் எந்த மேம்பாட்டு வசதியும் செய்யக் கூடாது என்ற அரசின் உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புர்வாலா அமர்வு விசாரித்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், “வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் சாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற மனைப் பிரிவுகளில் தமிழக அரசின் நிதி செலவிடப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கங்கா புர்வாலா தலைமையிலான அமர்வு, ” தமிழக அரசின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அரசு ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதற்கான வழிமுறைகளையும் வகுக்கிறது. அதைமீறி சில அதிகாரிகள் தவறாகச் செயல்படுகிறார்கள். இதை ஏற்க முடியாது. அந்த அதிகாரிகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக வரன்முறை செய்யாத மனைகள் எந்த அடிப்படை வசதிகளையும் இனி பெற முடியாது. மக்களே இனி விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வாங்கிவிடாதீர்கள். அப்படி வாங்கினால் அடிப்படை வசதிகளுக்கு கூட அவதிப்படும் நிலை வரலாம்.