பாய்ஸ் படத்தில் ஆரம்பித்த சித்தார்த்தின் 20 வருட திரைப்பயணத்தில் தன்னை முழு நடிகனாக மாற்றியது இந்த சித்தா திரைப்படம் தான் என பத்திரிகையாளர் சந்திப்பில் உருகியிருந்தார் சித்தார்த். அவரது பேச்சுக்கள் இந்த படத்தின் புரமோஷனுக்காக இல்லை என்பதை தாண்டி ஒரு உண்மையின் பிம்பமாக நின்ற இடத்திலேயே சித்தா அனைவரது கவனத்தையும் பெறத் தொடங்கியது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் என தொடர்ந்து விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய அருண் குமார் முதன்முறையாக சித்தார்த்தை வைத்து இயக்கி உள்ள சித்தா திரைப்படம் எப்படி இருக்கு? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சித்தா கதை: அண்ணன் மறைவுக்கு பிறகு அண்ணியையும் அண்ணனின் மகளையும் பார்த்துக் கொள்ளும் ஈஸ்வரன் அண்ணன் மகளுக்கு ஏற்படும் ஒரு துயரமான சம்பவத்தை தாங்க முடியாமல் என்ன செய்கிறார்.
என்பதும், அந்த சிக்கலில் அவரே சிக்கிக் கொள்ள அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதையும் அண்ணன் மகளுக்காக சித்தப்பாவாக ஈஸ்வரன் செய்யும் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் தான் இந்த சித்தா படத்தின் கதை. படம் எப்படி இருக்கு?: கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையை எடுத்துக் கொண்டு சில நடிகர்களை தவிர பல புதுமுகங்களை வைத்துக் கொண்டு அவர்களையும் நடிக்க வைத்து நடிப்பு நேர்த்திக்காகவே சித்தா படத்தை பார்க்கலாம் என சொல்லும் அளவுக்கு வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர் அருண் குமார்.
அண்ணன் இறந்த பின்னர் அண்ணியையும் அவரது குழந்தை சுந்தரியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்புள்ள இளைஞராக வலம் வரும் சித்தார்த் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்றும் தான் ஒரு சர்வதேச தரமுள்ள நடிகன் என்பதையும் நிரூபித்துள்ளார். சுந்தரியாக நடித்துள்ள சேட்டை சஹஸ்ராஸ்ரீ இந்த வயதில் எப்படி இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்கிற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார். மலையாள நடிகையான நிமிஷா சஜயன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். துப்புரவு தொழிலாளியாகவும் சித்தார்த்தை காதலிக்கும் இடங்களிலும் ஸ்கோர் செய்து விடுகிறார்.
பெண் குழந்தைகள் கடத்தப்படுவது, பாலியல் ரீதியாக அனுபவிக்கும் தொல்லைகள் என சிக்கலான விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை சீராக சொல்லி பதை பதைக்கவும் பாராட்டவும் வைத்துள்ளனர். யதார்த்தமான நடிகர்களை தேர்வு செய்து, நல்ல வசனங்களையும், திரைக்கதையையும் உருவாக்கி ஒரு உலகத் தரமான படத்தை கொடுக்க வேண்டும் என அருண் குமார் போட்ட உழைப்பும் அதற்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருந்து சித்தார்த் காட்டிய முயற்சியும் தான் படத்திற்கு பெரிய பிளஸ். விஷால் சந்திரசேகர், திபு நினன் தாமஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் வலு சேர்த்துள்ளனர். பழநி பேக்டிராப்பையும் சீரியல் தொனியில் படம் சென்று விடாமல் இருக்க ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் கனகச்சிதமாக பார்த்துக் கொண்டார். சுரேஷ் பிரசாத்தின் எடிட்டிங்கும் தரம்.
சில இடங்களில் இயக்குநர் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவது படத்தின் ஓட்டத்திற்கு சிறிய வேகத்தடையாக உள்ளது. சில காட்சிகளை இறங்கி அடிக்க வேண்டிய இடங்களிலும் அமைதி காத்து இது போதும் என தயங்கியது ஏன்? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
தமிழ் சினிமாவில் வெளியான தரமான படங்களில் சித்தார்த்தின் சித்தா திரைப்படமும் இடம்பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தியேட்டர்களில் சென்று பார்க்க வேண்டிய படமாகவே உள்ளது. நடிப்பு, இயக்கம், வசனம், இசை, மெனக்கெடல், திரைமொழி, கரு என அனைத்திலும் சித்தா சிறந்து விளங்குகிறது.