மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில், அரசு தற்போது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் சினிமா நடிகைகள் பயன்படுத்தும் கேரவன்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக She Toilet என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காகவும், கல்விக்காகவும் பெண்கள் சென்னைக்கு வருகின்றனர். இத்தகைய சூழலில் பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பகுதிகளில் கழிவறைகள் இல்லாமல் பெண்கள் இன்னல்களுக்கு ஆளாவதை நாம் பார்த்திருப்போம்.
அப்படியே பொது கழிவறைகள் இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையிலும், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாலும் பெரும்பாலான பெண்கள் அந்த கழிவறைகளை பயன்படுத்துவதே கிடையாது. மேலும் கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாமல் அவதிப்படுவதையும் நாம் பார்த்திருப்போம்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அவசரப் பணிக்காக வெளியில் செல்லும் பெண்களுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் இந்த நடமாடும் ஒப்பனை அறை வாகனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் கழிவறை, உடைமாற்றும் சிறு அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், சானிடைசர் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
மேலும் முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காகவே நடமாடும் ஒப்பனை அறை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், #SheToilet குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #SheToilet எனும் இந்தப் பாராட்டத்தக்க முன்னெடுப்பைத் தூய்மையாகப் பராமரிப்பது நம் அனைவரது பொறுப்பு. அதனை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்