பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும் ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 82. அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததன் காரணமாக அருளாசி வழங்குவதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீக புரட்சி இன்று வரை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கருவறைக்கு செல்லலாம், மாதவிடாய் என்பது சிறுநீர், மலத்தை போன்று ஒரு கழிவுதான் என்றும் அது பாவம் இல்லை என்று புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அவரது சேவைகளை பாராட்டி மத்திய அரசு 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்து வந்தனர். இவருக்கு மனைவி லட்சுமி அம்மாள், மகன்கள் ஜி.பி.செந்தில் குமார், ஜி.பி. அன்பழகன் ஆகியோர் உள்ளனர். இரு மகள்களும் உள்ளனர். மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும் ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமரின் பதிவில், “ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.