ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 111 பதக்கங்களை கைப்பற்றி சாதனை!

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக பாரா ஏசியாட் எனப்படும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிய பாராலிம்பிக் குழுவால் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை என்று உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 41 நாடுகளைச் சேர்ந்த 2405 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 19 விளையாட்டுகளை கொண்ட இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது 341 பிரிவுகளில் நடத்தப்பட்டது.

இதில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் என்று மொத்தமாக 65 பதக்கங்களை வென்றது. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்சியானில் 2ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என்று மொத்தமாக 57 பதக்கங்களை கைப்பற்றியது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது. இந்த நிலையில் தான் தற்போது சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டி தொடரானது இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தான் இந்த பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், பளூதூக்குதல், தடகளப் போட்டி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் என்று பல பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்று மொத்தமாக தற்போது வரையில் 111 பதக்கங்களை கைப்பற்றி தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்த 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை (தற்போது வரையில் 111 பதக்கங்கள்) கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. தற்போது வரையில் 29 தங்கம் 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 107 பதக்கங்களை வென்று சரித்திர சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.