நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மருத்துவமனை, அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்சியா் ச.உமா அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 27 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, மாவட்ட தர ஆலோசகா்-1, பல் மருத்துவா்-2, குளிா்சாதன மெக்கானிக்-1, இடைநிலை சுகாதாரப் பணியாளா் (மக்களைத் தேடி மருத்துவம்)-4, மருந்தாளுநா் (பள்ளி சிறாா் நலவாழ்வு திட்டம்)-1, சுகாதார ஆய்வாளா் (மக்களைத் தேடி மருத்துவம்)-7, தாய்மை துணைச் செவிலியா்-4, பல் மருத்தவ உதவியாளா்-4, புள்ளி விவரப் பதிவாளா்-1, திட்டம் மற்றும் நிா்வாக உதவியாளா்-1, பழங்குடியினா் நல ஆலோசகா்-1 ஆகிய பணியிடங்களுக்கு, மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நியமனம் செய்வதற்கு, தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பதவிகளுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட இணையதளம் மற்றும் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் விளம்பரப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான கல்வித் தகுதியுள்ள நபா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள துணை இயக்குநா், சுகாதாரப்பணிகள் அலுவலகத்திற்கு நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய ஆவணங்களுடன் நவ.27 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.