ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கிடா’. இப்படத்தில், பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் நடித்துள்ளனர். பூராம் அவர்களின் ஒரு வாழ்க்கை மற்றொருபுறம் காளி வெங்கட் அவர்களின் வாழ்க்கை.. இவர்கள் இருவரையும் வாழ்க்கையை இணைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
தாய், தந்தையை இழந்த சிறுவன் தீபன், தனது தாத்தா பூராம், பாட்டி பாண்டியம்மாவுடன் வசித்து வருகிறான்.
தென்னங்கீற்று நெய்தல் வேலை செய்கிறார் பூ ராமு. தீபாவளிக்கு புது டிரெஸ் வேண்டும் (விளம்பரங்களில் காட்டப்படும் ஒரு ஆடை வாங்க ஆசை) என பேரன் அடம் பிடிக்கவே அதை வாங்கி கொடுக்க இவர்கள் செய்யும் செயல்கள் ஒரு பக்கம்.
மற்றொரு புறம் ஒரு முதலாளியிடம் கிடா கறி வெட்டும் தொழில் செய்பவர் காளி வெங்கட். ஒரு கட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு தீபாவளி தினத்தில் தனியாக தொழில் தொடங்க நினைக்கிறார் காளி. இந்த நிலையில் பூ ராம் ஆசையாக வளர்த்த கிடா ஒன்று திருடு போகிறது.. அதற்கும் காளிக்கும் என்ன சம்பந்தம்..? அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு பண்பட்ட கலைஞர் என்ற பெயரை எடுத்தவர் பூராம். அது போல அநீதி கார்கி உள்ளிட்ட படங்கள் மூலம் நடிப்பில் முத்திரை பதித்தவர் காளி வெங்கட். இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் எனலாம்.
அதுபோல பூராமின் மனைவியாக வரும் பாண்டியம்மா அவர்களின் பேரனாக நடித்த மாஸ்டர் தீபன் ஆகியோரும் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நடிப்பில் பல கைத்தட்டல்களை பெறுகின்றனர்.
கிளைமாக்ஸ் காட்சியில் மாஸ்டர் தீபன் கொடுக்கும் திருட்டு முழி ரியாக்ஷன் வேற லெவல் ரகம். அதுபோல க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் காளி பணத்தை கொடுக்கும் காட்சி நம்மை ரசிக்க வைக்கும்.
காளி வெங்கட்டின் மனைவி, மகன், மகனின் காதலி, டீக்கடைக்காரர், காளி வெங்கட்டின் நண்பர் ஆகியோரும் சிறப்பான தேர்வு.
தீசனின் இசை ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு.. இவை இரண்டும் தீபாவளிக்கு கிடா விருந்து
தீபாவளிக்கு கிடா விருந்து மற்றும் புத்தாடை இரண்டையும் கலந்து தீபாவளிக்கு ஏற்ற ஒரு விருந்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ரா வெங்கட். பலருக்கு தீபாவளிக்கு லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால் ஒரு சிலருக்கு ரூ 500 – 1000 கிடைப்பதே அரிது.
இன்றளவிலும் தீபாவளி கொண்டாட துணி எடுக்க முடியாமல் தவிக்கும் பல குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வியலை ‘கிடா’ படத்தின் மூலம் நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட். கதைக்களம் மட்டுமல்ல கதைக்கு தேர்வு செய்த நடிகர்களும் இந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் கதை பெரிதாக இருப்பதில்லை.. ஆனால் சின்ன கதையை உணர்வுகள் மூலம் பிரம்மாண்டம் ஆக்கலாம் என நிரூபித்துள்ளனர். கிடா குழுவினருக்கு பாராட்டுக்கள்…