திருக்கோவிலூர் பரணிதரன்

சமீபத்தில் என்னுடைய உறவினர் ஒருவரை சந்தித்தபோது ஒரு பேச்சு எழுந்தது…

எல்லா கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரப்போகிறதாமே…

அதிர்ஷ்டம் உண்டாகுமென்று சொல்கிறார்களே… என்றார்.

எனக்கு ஒரே குழப்பம்…. மேஷம் தொடங்கி மீனம் வரையில் 360 டிகிரிகள் கணக்கிடப்பட்டுள்ளது. அதை ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகளாக பிரித்துள்ளோம்… ஒரு கிரகத்திற்கும் அடுத்த கிரகத்திற்கும் உள்ள இடைவெளியை இருவரும் எந்த டிகிரியில் சஞ்சரிக்கின்றனர் என்பதை வைத்தே நாம் தீர்மானம் செய்கிறோம்.

எப்போதாவது ஒன்றிரன்டு கிரகங்கள் ஒரே டிகிரியில் சஞ்சரிக்கலாம்.

கிரகங்களில் மிக மிக குறைவாக ஒரு ராசியில் இரண்டேகால் நாள் மட்டும் ஒன்பது பாதங்களில் சஞ்சரிப்பவர் சந்திரன். அவருக்கு ஆட்சி வீடு கடகம்.

கிரகங்களில் மிக அதிகபட்சமாக ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பவர் சனி. அவருக்கு ஆட்சி வீடுகள் மகரமும், கும்பமும்.

ஒன்பது கிரகங்களின் சுழற்சிக்கேற்பவே மனித வாழ்க்கை நடைபோடுகிறது.

இதில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், பகை, வக்கிரம், அஸ்தங்கம் என்று எந்த நிலையையும் அடையலாம். அதற்கேற்பவும் பலன்கள் மாறுபடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நபருடைய ஜனன காலத்தில் சந்திரன் சஞ்சரித்த ராசியையும், நட்சத்திரத்தையும் வைத்தே அவருடைய ராசியும் நட்சத்திரமும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் என்ன லக்கினமோ அதுவே அவரின் லக்கினமாக குறிக்கப்படுகிறது.

இதற்காகத்தான் பிறந்த நேரம் நமக்கு அவசியமாகிறது.

ஒவ்வொருவருக்கும் அவருடைய ராசிநாதன் என்பவர் அவருடைய ராசியிலேயே இருப்பார் என்று சொல்ல முடியாது. அதேபோல் லக்கினாதிபதியும் லக்கினத்திலேயே இருப்பார் என்று சொல்ல முடியாது. வேறு ஸ்தானத்தில் வெவ்வேறு நிலைகளில் அவர்கள் சஞ்சரிக்கலாம்.

அதேபோல் திசாபுத்தி என்பது வாழ்க்கையை வழிநடத்துவதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

சரி – திசா புத்தியை எப்படி கண்டுபிடிப்பது? அதற்குத்தான் பிறந்த நேரம் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் எந்த நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியே திசாநாதனாவார்.

சரி – புத்தி எப்படி கணக்கிடப்படுகிறது? ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்ததாக வைத்துக்கொள்வோம்! அந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். அவருடைய திசா காலம் 20 ஆண்டுகள்.

ஆனால், இங்கும் ஒரு கணக்கு இருக்கிறது! உதாரணத்திற்கு பரணி நட்சத்திரம் அல்லும் பகலும் 60 நாழிகை வரை இருக்கும். அதன்பிறகு கிருத்திகை வந்துவிடும். இந்த 60 நாழிகையில் ஜாதகன் பிறந்த நாழிகையைக் கணக்கிட வேண்டும்! ஜாதகன் பிறந்த நேரத்தில் சென்ற நாழிகை என்ன இருப்பு நாழிகை என்ன என்பதை வைத்து அந்த திசையில் எந்த புத்தியில் பிறந்துள்ளார் என்பதை தீர்மானிப்போம். அதுமுதல் திசாபுத்தி அவர்களின் காலத்திற்கேற்ப மாற ஆரம்பித்து அதற்கேற்ப ஜாதகருக்கு பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் நம்ம ஜோதிடர்கள் கிரகமாலிகா யோகம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இதைத்தான் என்னுடைய உறவினரும் எல்லா கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக சொன்னார் என்பதையும் உணர்ந்தேன்.

கிரகமாலிகா என்பது… கிரகங்கள் மாலைபோல் நெருக்கமாக ஆட்சி பெற்றிருப்பதாகும்?

சரி… இதனால் நேற்றுவரை பிறந்தவர்களுக்கு என்ன பலன்?

என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்!

அடுத்த இடத்திற்கு வருவோம்… அவர்கள் சொல்லும் 5 கிரகங்களின் கதைகளுக்கு.

முன்பே சொன்னேன் சந்திரன் ஒரு வீட்டில் இரண்டேகால் நாட்கள்தான் சஞ்சரிப்பார்! அந்த ரீதியில் சுமாராக… 1.7.2022 அன்றும் 2.7.2022 அன்றும் அவருடைய ஆட்சி வீடான கடகத்தில் சஞ்சரிப்பார்! அடுத்த நாள் சிம்மத்திற்கு சென்று விடுவார்.

கடகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில், கடகத்திற்கு தன குடும்பாதிபதியான சூரியனின் நிலை என்ன? 12 ஆம் இடத்தில் மறைந்துள்ளாரே!

புதன் ஆட்சி… சரி, சந்திரனுக்கு 12 ஆம் அதிபதிதானே புதன்! விரையாதிபதி விரையத்தில் ஆட்சி பெற்றுள்ளார்! இதுதானே உண்மை. அதுவும் ராகுவின் திருவாதிரை சாரத்தில்!

அந்த நாட்களில் சனி அவருடைய ஆட்சி வீடான மகரத்தில் ஆட்சியாக சஞ்சரித்தாலும் வக்கிரகதியை அவர் அடைந்திருப்பதுடன், சந்திரனின் நட்சத்திரமான திருவோணத்தில் சாரம் பெற்றுள்ளார்! சனிக்கும் சந்திரனுக்கும் பகை என்பதும் சந்திரனுக்கும் சனிக்கும் பகை என்பதும் தனிக்கதை ஆனால், கடகத்தின் ஏழாம் வீடுதானே மகரம்? ஏழாமிட சனி என்ன செய்வான்?

அடுத்து, குரு மீனத்தில் ஆட்சி பெற்றுள்ளார். சரி, அவர் யாருடைய சாரத்தில் இருக்கிறார்? சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் சாரத்தில்!

குரு சனி சேர்க்கை பார்வை என்பதை பார்த்தால் அதுதான் பிரம்மஹத்தி தோஷமாக கூறப்படுகிறது! கடந்த 4 ஆண்டுகளாக குரு சனி சேர்க்கைதான் நாட்டை அவதிக்குள்ளாக்கி வருகிறது… இந்த நிலையில் புதனின் ரேவதி சாரத்தை அவர் பெறும்போதுதான் நாட்டிற்கே விமோசனம்!

அடுத்து செவ்வாய்… தனது சொந்த வீடான மேஷத்தில் ஆட்சி பெறுகிறார் என்றாலும், கேதுவின் பார்வையில் ராகுவுடன் இணைந்து கேதுவின் நட்சத்திரமான அசுவினியின் சாரம் பெற்றுள்ளார்! இவரால் எத்தகைய பலன்களை வழங்க முடியும்?

அடுத்து, சுக்கிரன் அவருடைய ஆட்சி வீடான ரிஷபத்தில் ஆட்சி பலம் பெற்றாலும் சந்திரனின் ரோகிணி சாரம் பெற்றுள்ளார்!

கிரகமாலிகா யோகம்!

6 கிரகங்கள் ஆட்சி! என்றெல்லாம் பரபரப்பாக பேசி மக்களின் அறியாமையை அறுவடை செய்து வருபவர்கள் நாம் குறிப்பிட்டுள்ள கிரக நிலைகளைக் குறித்து, இந்த நிலையில் இந்த கிரகங்கள் எந்த யோகத்தை யாருக்கு வழங்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டும்!

அனைத்திற்கும் மேலாக நேற்றுவரை பிறந்தவர்கள்… இந்த பேச்செல்லாம் நமக்கில்லை என்பதை உணர்ந்து, அவரவர் ஜாதகத்தை மட்டும் வைத்து, ராசி, லக்கினம், சூரியன் திசாபுத்திகளை வைத்து தங்களுக்குரிய பலன்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜோதிட வித்தகர், திருக்கோவிலூர் பரணிதரன், செல்: 9444393717